தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு நாகராஜ் என்பவரின் வீட்டில் சமையல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எரிவாயு கசிவு காரணமாக சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. தீ வேகமாக அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவிய நிலையில், மற்றொரு வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டரும் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் நான்கு வீடுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், 4 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் கருகியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, எரிவாயு கசிவு காரணமாகவே விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Leave a Reply