கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் சில உறுப்பினர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு, முந்தைய திமுக ஆட்சியில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், திமுக கவுன்சிலர் மீனாலோகு உள்ளிட்ட பெண் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் திமுக உறுப்பினர்கள் காயத்ரியை மாமன்றக் கூட்ட அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் தலைமையில் குடிநீர் பிரச்சினையை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் சின்னவேடம்பட்டி ஏரி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியதால் மாமன்றக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, ஒழுங்கு திரும்பும் வரை கூட்டத்தை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார்.
அமளிக்குப் பிறகு, மாமன்றத்தின் மாண்பை மீறியதாகக் கூறி முதலில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சாந்தி, பிரபா ரவீந்திரன் ஆகியோரை இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக மேயர் அறிவித்தார். பின்னர் கூட்டம் மீண்டும் தொடங்கியபோது, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மட்டும் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே, மாமன்றக் கூட்ட அரங்கில் முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தது உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. முதலமைச்சர் விஜயின் படத்துடன் முன்னாள் முதலமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி உள்ளிட்ட முன்னாள் தலைவர்களின் படங்களும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன.
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களை மையமாகக் கொண்டு ஏற்பட்ட அமளி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply