நஞ்சுண்டாபுரத்தில் இருந்து  வெள்ளலுார் செல்ல, 60 அடி திட்டச்சாலை அமைக்கப்படுமா?

Spread the love

கோவையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல பிரதான ரோடுகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இணைப்பு சாலைகள், திட்ட சாலைகள் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 5 இணைப்பு சாலைகள் ஏற்படுத்த தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனைப்பிரிவு அனுமதி பெறும்போது, வளர்ச்சி கட்டணமாக கோவை மக்கள் செலுத்திய தொகை, நகர ஊரமைப்புத் துறையில் கோடிக்கணக்கில் இருக்கிறது. இந்த தொகையை கேட்டுப் பெற்று சாலைகள் உருவாக்க வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்லும் வாகன ஓட்டிகள், நஞ்சுண்டாபுரம் ரயில்வே பாலத்துக்கு கீழே உள்ள கரடுமுரடான ரோட்டில் செல்கின்றனர். இருபுறமும் புதர் மண்டி கிடக்கிறது. தெருவிளக்கு வசதி இல்லை என்பதால் இரவில் இந்த பாதையை பயன்படுத்துவது ஆபத்தானது. போத்தனுார் வழியாக வெள்ளலுார் செல்வது சுற்றுப்பாதை; பல கி.மீ. அலைய வேண்டும்.

நஞ்சுண்டாபுரம் மயானம் அருகே உள்ள வழித்தடத்தில் வெள்ளலுார் செல்ல, 60 அடி திட்டச்சாலை உருவாக்க, உள்ளூர் திட்ட குழுமத்தில் திட்ட வரைவு உள்ளது. ரயில்வே கேட் கடந்ததும் கந்தன் பிள்ளையார் ரோட்டின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால் இணைப்பு சாலை உருவாகி விடும். வெள்ளலுாரில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் வாகன ஓட்டிகள் சென்று வரலாம்.