பவானி ஆற்றில் புதிய பாலம் கட்டுவது எப்போது?

Spread the love

மேட்டுப்பாளையத்திலுள்ள பவானி ஆற்றின் குறுக்கே, புதிய பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தையும், நீலகிரி மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே பாலம்1985ம் ஆண்டு கட்டப்பட்டது.  இப்பாலத்தின் வழியாக தற்போது ஊட்டி, கோத்தகிரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் செல்லும் போது, பாலம் ஆடுகிறது.

இந்த பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் இடிந்து விழுவதால், பாலத்தின் தாங்கும் திறன் குறைந்து விட்டதோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரண்டு மாவட்டங்களை இணைக்கும் ஒரே பாலம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் பாலம். இப்பாலத்துக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இரண்டு மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டித்து விடும். அதனால் மற்றொரு புதிய பாலம் கட்ட வேண்டும் என, பயணிகள் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   கடந்தாண்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் புதிய பாலம் கட்ட, மண் பரிசோதனை செய்யப்பட்டது. பாறைகளிலும் பரிசோதனை நடத்தப்பட்டது.  புதிய பாலம் கட்ட, 234 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து மத்திய அரசுக்கு, அதிகாரிகள் அனுப்பினர்.