சூலூர் அருகே வசித்து வந்த தம்பதியரின் 10 வயது மகள், கடந்த வியாழக்கிழமை மாலை அருகிலுள்ள கடைக்கு சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில், கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது நண்பரான மோகன்ராஜும் பின்னர் கைது செய்யப்பட்டார். சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரிடமிருந்து தப்பியோட முயன்றபோது கார்த்திக் கீழே விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட மோகன்ராஜை வரும் மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply