தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்ற வேண்டும், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் நடைபெற்ற அனைத்து அருந்ததியர் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மாவட்டம் ஆதி தமிழர் பேரவை தலைமையகத்தில், தமிழ்நாடு அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விவரங்கள் சேகரிப்பது குறித்து அனைத்து அருந்ததியர் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்துவது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில், ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் போதைப்பழக்கத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்முறைகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சமூக நீதி மற்றும் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை தாமதமின்றி நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தங்கபாண்டியன், பெளத்திரன், அகத்தியன், விடுதலை வீரன், வி.பி. ராமன், பேரவை தோழர்கள் ராவணன், நாகேந்திரன், விடுதலை செல்வன், ஈழவேந்தன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Reply