கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி கண்ணம்பாளையம் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளபாளையம் பாரதிபுரம் அருணகிரிநாதர் வீதியைச் சேர்ந்த ரகுபதி – பவித்ரா தம்பதியினரின் மகள் தர்சினி (10) நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுமியை தேடுவதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சிறுமி கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கோவை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply