கோவை அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் விணீத் தவெகவில் இணைந்தார்!

Spread the love

அதிமுக நிர்வாகியான விணீத் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக அக்கட்சித் தொண்டர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

இதனிடையே இன்று இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளின் பதவியை இபிஎஸ் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த சூழலில், அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை கோவை மாவட்ட துணை தலைவர் பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் விணீத் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்,

ஒரு அரசியல் இயக்கத்தில் கருத்து வேறுபாடுகளும், பல்வேறு சூழ்நிலைகளும் இயல்பானவை என்பதை நான் நன்றாக புரிந்திருக்கிறேன். அதே நேரத்தில், அண்மைக் காலமாக கட்சிக்குள் நிலவி வரும் சில உள்கட்சிப் பிரச்சினைகள், தொடர்ச்சியான மனக்கசப்புகள் மற்றும் எனது மனதிற்கு வருத்தமளிக்கும் சில நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்துள்ளன. இத்தகைய சூழ்நிலைகளில் கூட, அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையுடன் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து தொடர்ந்து பணியாற்ற முயன்றேன். பல முறை என்னுடைய தனிப்பட்ட மனவேதனைகளை கூட வெளிப்படுத்தாமல் கட்சியின் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்பட்டேன்.

ஆனால், தற்போதைய சூழ்நிலை காரணமாக மனஅமைதியுடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவை எடுப்பது எனக்கு மிகவும் வேதனையான ஒன்றாகும். நீண்ட நாட்களாக மனப்போராட்டத்திற்குப் பிறகும், பலரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்ட பிறகும், கனிந்த மனதுடனும் மிகுந்த வருத்தத்துடனும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை தலைவர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, விஜய் தலைமையிலான தவெக அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையனை சந்தித்த விணீத் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.

அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதும், மாற்றுக் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்வதுமான சம்பவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருவதால் அக்கட்சித் தொண்டர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.