சமூக ஆர்வலர் வே. சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்திய பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி

Spread the love

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் மறைந்த சமூக ஆர்வலர் தோழர் வே. சுப்பிரமணியனுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், இந்திய கலாச்சார நட்புறவு கழகம், பல் சமய நல்லுறவு இயக்கம், மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் சங்கங்கள், மாநில அரசு ஓய்வூதியர் சங்கம் மற்றும் பல்வேறு இலக்கிய, சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தோழர் வே. சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் ஹாஜி ஜெ.முகமது ரஃபி, “தோழர் வி.எஸ். பல்வேறு காலகட்டங்களில் ஏழை மற்றும் எளிய மக்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்தவர். கோவை தெலுங்குபாளையம் முதல் வேடப்பட்டி வரை சாலைகள் அமைக்க முக்கிய காரணமாக இருந்தவர் அவர்தான். அதை எப்போதும் மறக்க முடியாது,” என்றார்.

மேலும், “பல் சமய நல்லுறவு இயக்கத்திற்கு அவர் மிகுந்த ஆதரவாக இருந்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கார்டு பெற்றுத் தந்துள்ளார். சமூக அக்கறையுடன் செயல்பட்ட நல்ல நண்பராக அனைவராலும் மதிக்கப்பட்டவர். அரசுத்துறைகளில் எந்த உதவியும் தேவைப்பட்டாலும் உடனடியாக செய்து கொடுப்பார்,” என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வில் ப.பா.ரமணி, ராதாகிருஷ்ணன், சூர்யகாந்தன், பேரூர் நாகராஜ், கே.சுப்பிரமணியம், அபுதாகிர், இஸ்மாயில், ராஜன் கோட்டியப்பன், எழுத்தாளர் கா.சு. வேலாயுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.