முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டு

Spread the love

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது தெளிவான நிர்வாகம் இல்லை என்றும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக இந்த ஆட்சியைக் கவிழ்க்கத் தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், அரசின் நிர்வாகத் தோல்விகளால் தானாகவே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் விமர்சித்தார்.

தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அவர், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைப் பெறத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் முதலமைச்சருக்குப் போதிய அக்கறை இல்லை என்றும் குற்றம்சாட்டினார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய தண்ணீரைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மின்சாரக் கொள்முதல் தொடர்பாகப் பேசிய அவர், கடந்த காலத்தில் யூனிட் 20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்ததையே ஊழல் எனக் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது 37 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றிருக்காதா எனக் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்குப் பிறகே முழுமையாகக் கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும், தமிழக அரசு நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை முறையாக முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அக்கட்சி இன்னும் முறையான அமைப்பாகக்கூட உருவாகவில்லை என்றும், அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.

எஸ்.பி. வேலுமணி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் திருமண விழாவில் ஒன்றாக இருந்தது குறித்த கேள்விக்கு, அந்த வீடியோவைப் பார்த்துச் செய்தியாளர்களே முடிவு செய்துகொள்ளலாம் எனப் பதிலளித்தார். மேலும், எஸ்.பி. வேலுமணி அதிமுக தொண்டர்களில் ஒருவர்தான் என்றும், கட்சி விவகாரங்கள் குறித்து அதிமுகவினரிடமே தொடர்ந்து கேள்வி எழுப்புவது ஏன் என்றும் வினவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *