கிராமப்புற நாட்டுப்புறக் கலையான ஒயிலாட்டத்தை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுக்கொடுத்து வளர்த்தெடுத்த கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரும், ‘சங்கமம்’ ஒயிலாட்ட ஆசிரியருமான கனகராஜ், பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியின்போது மாரடைப்பால் காலமானார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ். அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரான இவர், பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான ஒயிலாட்டத்தின் மீது தீராத பற்று கொண்டிருந்தார். ‘சங்கமம்’ என்ற அமைப்பின் மூலம் இப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக ஒயிலாட்டப் பயிற்சி அளித்து வந்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கலைஞர்களை உருவாக்கி, அழிந்து வரும் கிராமியக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
இந்நிலையில், பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் கருமத்தம்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலைப் பணியையே தனது மூச்சாகக் கொண்டு செயல்பட்ட ஆசிரியர் கனகராஜின் திடீர் மறைவு, அவரது மாணவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கருமத்தம்பட்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பல்வேறு கலை அமைப்பினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Leave a Reply