புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்: கேஸ் ரசீது கட்டாயமில்லை – உணவுப்பொருள் வழங்கல் துறை தெளிவு!

Spread the love

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், கேஸ் சிலிண்டர் ரசீதை இணைப்பது கட்டாயமில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. புதிதாகத் திருமணமானவர்கள் மற்றும் புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், வட்ட வழங்கல் அலுவலர்கள் கேஸ் ரசீதைக் கட்டாயம் கேட்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள விளக்கத்தில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன் கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயம் இல்லை என்றும், அதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். விண்ணப்பதாரர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையுடன், முகவரிச் சான்றாகச் சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம், மின்கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் இணைத்தால் போதுமானது.

விண்ணப்பிக்கப்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் பரிசீலிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.