வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளைச் செய்வதும், நீர்நிலைகளில் கரைப்பதும் தொடர்பான முக்கியக் கட்டுப்பாடுகளைச் சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற மக்காத பொருட்கள் கலக்கப்படாத சிலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும், சிலைகளுக்கு நச்சுத்தன்மை கொண்ட ரசாயனச் சாயங்களையோ அல்லது எனாமல் வண்ணங்களையோ பூசக் கூடாது என்றும், நீர் சார்ந்த, மக்கக்கூடிய இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து வைக்கோல், உலர்ந்த மலர்கள் போன்ற இயற்கைச் சாதனங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட நிர்வாகத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி சிலைகளைக் கரைக்க வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.



Leave a Reply