பழங்குடியின மக்களின் நலத்திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.
கோவை வேலந்தாவளம் பகுதியில் உள்ள சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், தொல். திருமாவளவன், தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், மக்கள் தேவைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திப்பது தங்களது கடமை என்றார். தமிழகத்தில் பழங்குடியின மக்களின் நலன்களை மேலும் மேம்படுத்த மத்திய அரசின் துணை, உதவி மற்றும் நிதி தேவைப்படுவதாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.
பழங்குடியின மக்கள் மக்கள் தொகையில் குறைந்த அளவில் இருப்பதால் அவர்களின் பிரச்னைகள் போதிய கவனம் பெறவில்லை. குறிப்பாக சாதிச் சான்றிதழ் பெறுவதில் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வீடு உள்ளிட்ட அடிப்படை நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் மத்திய அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
மேலும், ஆடம்பர நிகழ்ச்சிகளில் உணவு வீணடிக்கப்படுவது குறித்து வேதனை தெரிவித்த அவர், ஒருவரால் உண்ணக்கூடிய அளவைவிட பல மடங்கு உணவு பரிமாறப்பட்டு வீணடிக்கப்படுவதாகக் கூறினார். மனிதநேயமே அனைவருக்கும் உயர்ந்தது; கட்சி மற்றும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் சகோதரர்களாக உணர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய அமைச்சர் வன்னியரசு, பழங்குடியின மக்களின் நலனுக்காக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பழங்குடியின மக்களின் மரபு, மொழியைப் பாதுகாப்பது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், செங்காந்தள் மலர் சாகுபடியை ஊக்குவித்து அதை நேச்சுரோபதி மருத்துவத்துக்கு பயன்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டு ள்ளதாகவும் கூறினார்.
யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவத்தை மதத்துடன் இணைத்து சிலர் செயல்படுத்த முயற்சிப்பது மருத்துவத் துறையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. மருத்துவம் மருத்துவமாகவும், யோகா யோகாவாகவும் இருக்க வேண்டும்; அதில் மதம் சார்ந்த செயல்பாடுகள் இடம்பெறக் கூடாது என்றும் வன்னியரசு தெரிவித்தார்.
சாய் நேச்சுரோபதி கல்லூரி விழா – அமைச்சர் ஜுவல் ஓரம், அமைச்சர் வன்னியரசு, திருமாவளவன் பங்கேற்பு



Leave a Reply