இலவச காஸ் சிலிண்டர் வழங்கக் கோரி ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டி மனு

Spread the love
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த 2 மாதங்களாக இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை எனக் கூறி, ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டி கமலாத்தாள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.

கோவை வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். கணவரை இழந்த இவர், பல ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறார். லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது சேவையை முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கமலாத்தாளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமலாத்தாள் கூறியதாவது:

“உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை சிலிண்டர் கிடைத்து வந்தது. ஆனால், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் வழங்கப்படவில்லை. இதனால் இட்லி கடை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து இலவச சிலிண்டர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *