அகில இந்திய மேலாண்மை சங்கம் (AIMA) சார்பில் வழங்கப்படும் “இந்தியாவின் சிறந்த மேலாண்மை சங்கம்” விருதை மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (MMA) தொடர்ந்து 16-ஆவது ஆண்டாகப் பெற்றுள்ளது.
எம்.எம்.ஏ. தனது 70-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிளாட்டினம் ஜூபிலி கொண்டாடி வரும் நிலையில், இந்த தேசிய விருது கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
மேலாண்மைக் கல்வி, தொழில்முறைத் திறன், சிந்தனைத் தலைமை மற்றும் வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் மாநாடுகள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், பயிலரங்குகள், போட்டிகள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை எம்.எம்.ஏ. தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதுகுறித்து எம்.எம்.ஏ. தலைவர் ஏ.ஆர். உன்னிகிருஷ்ணன் கூறுகையில், தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்த தேசிய விருதைப் பெறுவது, இந்திய மேலாண்மைத் துறையில் எம்.எம்.ஏ. மேற்கொண்டு வரும் தொடர் பங்களிப்புக்கான அங்கீகாரம் என்றார்.
எம்.எம்.ஏ. செயலாக்க இயக்குநர் குரூப் கேப்டன் (ஓய்வு) ஆர். விஜயகுமார், இந்த விருது மேலாண்மைக் கல்வி மற்றும் தொழில்முறைச் சிறப்புக்கான அமைப்பின் தொடர் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
புதுதில்லியில் தாஜ் பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் பிளாட்டினம் ஜூபிலி தேசிய மேலாண்மை மாநாட்டின் தொடக்க விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் முன்னாள் ஜி20 ஷெர்பா மற்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் விருதை வழங்கினார்.
எம்.எம்.ஏ. சார்பில் அதன் முன்னாள் தலைவர் லட்சுமிநாராயணன் துரைசாமி, தலைவர் ஏ.ஆர். உன்னிகிருஷ்ணன், செயல் இயக்குநர் குரூப் கேப்டன் ஆர். விஜயகுமார் (ஓய்வு), VSM ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.



Leave a Reply