கோவை மாநகரின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. மேம்பாலத்தில், நள்ளிரவு நேரத்திலும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நள்ளிரவுக்கு முன்பாக அந்த மேம்பாலத்தில் சென்ற சொகுசு கார் ஒன்றின் சன்ரூஃப் முழுமையாக திறக்கப்பட்டிருந்தது.
அந்த காரில் பயணித்த நான்கு இளம்பெண்கள், சன்ரூஃப் வழியாக உடலை வெளியே நீட்டி, அதன் மீது அமர்ந்தபடி கைகளை அசைத்து ஆரவாரம் செய்தபடி பயணித்தனர். மேம்பாலத்தின் வளைவுகளிலும் அவர்கள் அதேபோல் ஆபத்தான நிலையில் இருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தச் செயல் பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் இருந்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்திருந்தாலோ அல்லது வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருந்தாலோ, சன்ரூஃபில் அமர்ந்திருந்தவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு அல்லது கடுமையான காயம் ஏற்படும் அபாயம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த காட்சியைக் கண்டு பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “கோவையில் நள்ளிரவில் அரங்கேறும் ஆபத்தான சாகசம்” என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து விதிகளை மீறி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதுபோன்ற ஆபத்தான செயல்கள் இளைஞர்களிடையே தவறான முன்னுதாரணமாக அமையக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Leave a Reply