கோவையில் மரக்கன்றுகள் நட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

Spread the love

பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சிச் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் மரக்கன்றுகள் நட்டு வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக கோவை மாவட்ட செல்யலாளர் ரமேஷ்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் க்லந்து கொண்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி திட்டக் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று பயணம் செய்கிறேன். இன்று காலை மகாகாளி அம்மன் கோவிலில் வழிபாடு செய்ததுடன், தூய்மை பாரத பணிகளிலும் பங்கேற்றேன். தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களும் நடை பெறுகின்றன” என்றார்.
மேலும், “நாடு முழுவதும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. எனது பாராளுமன்றத் தொகுதியிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை சிறந்த தொழில் நகரமாக திகழ்கிறது. இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் கோவை முக்கிய பங்காற்றி வருகிறது” என்று பாராட்டினார்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், “நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் இந்த நிகழ்ச்சிகளை மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுத்து வருகி ன்றனர். அதே எழுச்சியை தமிழ்நாட்டிலும் காண முடிகிறது. வருங்காலத்தில் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி முன்னணி அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
அரசியல் கேள்வி களுக்கு பதிலளித்த அவர், “கரப்பான்பூச்சி கட்சி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில் தவெக அரசின் செயல்பாடுகளை இப்போது விமர்சிப்பது சரியானதாக இருக்காது. இருப்பினும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.