கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

Spread the love
கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் மத்திய வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு, தகுதிச் சான்றிதழ் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலம் லஞ்சப் பணம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனை தொடங்கியதும் ஆர்.டி.ஓ அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இடைத்தரகர்கள் மற்றும் சில அதிகாரிகள் லஞ்சமாக பெறப்பட்ட பணத்தை வாகனங்களில் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், போக்குவரத்துத் துறை மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அதன் முழுமையான விவரங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *