கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ பாராட்டு விழா மற்றும் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா நடைபெற்றது.
உறுப்பு தான முயற்சியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் கேஎம்சிஹெச் மருத்துவமனை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் மேற்குத் தமிழகத்தின் முக்கிய மையமாக செயல்பட்டு வருகிறது.
உறுப்பு தானப் பாராட்டு வாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இவ்விழாவில், துயரமான சூழ்நிலையிலும் தங்களது அன்புக்குரி யவர்களின் உறுப்புகளைத் தானமாக வழங்கி, பலரது வாழ்வுக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உறுப்பு தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவரைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மேற்குத் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கேஎம்சிஹெச் மருத்துவமனை ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டிப் பேசினார்.
கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையுரையில், நூற்றுக்கணக்கான நோயாளி களுக்கு மறுவாழ்வு கிடைக்க காரணமாக இருந்த உறுப்பு தான கொடையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினரின் தியாகத்திற்கும் மருத்துவமனை சார்பில் நன்றி தெரிவித்தார்.
கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி பேசுகையில், துயரமான கால கட்டத்திலும் சக மனிதர்களின் துயரைத் துடைக்க முன்வருவது மனித மாண்பின் உச்சம் எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக கேஎம்சிஹெச் மருத்துவ இயக்குனர் டாக்டர் ஏ.என். முருகன் வரவேற்புரை யாற்றினார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி. பாஸ்கர், ‘கேஎம்சிஹெச்சில் வாழ்வுக்குப் பின் வாழ்க்கை’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். யுவராஜ், 2025-26ஆம் ஆண்டுக்கான உறுப்பு தான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மருத்துவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மரக்கன்று நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மயக்கவியல் நிபுணர் டாக்டர் டி. அருண் குமார் நன்றியுரையாற்றினார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ தானமளித்தோர் குடும்பங்கள் கவுரவிப்பு



Leave a Reply