கிணத்துக்கடவில் பெண் எரித்துக் கொலை: தந்தையுடன் மகன் கைது

Spread the love
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத பெண் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், பெண்ணை கொலை செய்து உடலை எரித்து தடயங்களை அழிக்க முயன்றதாக தந்தை மற்றும் மகனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவு அருகே தனியார் நிறுவனத்தின் பின்புறமுள்ள காலியிடத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே.ரெட்டி உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 120-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர். இதில், ஜூலை 27-ஆம் தேதி சம்பவம் நடந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் காட்சிகள் கிடைத்தன. அந்த வாகனத்தின் பயணத்தை பல்வேறு சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்ததில், அது பொள்ளாச்சியில் இருந்து வந்தது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர் குறித்து நடத்திய விசாரணையில், அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த பழனிமுத்து (35) என்பதும், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதா (30) என்பதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், பழனிமுத்துவும் சங்கீதாவும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்ததாகவும், கடந்த 6 மாதங்களாக சங்கீதா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த பழனிமுத்து அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

இந்நிலையில், ஜூலை 27-ஆம் தேதி இரவு கிணத்துக்கடவில் உள்ள பழனிமுத்துவின் வாடகை வீட்டில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பழனிமுத்து, கத்தியால் சங்கீதாவை குத்திக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பின்னர் தனது தந்தை குருநாதன் (60) உதவியுடன் சங்கீதாவின் உடலை போர்வையில் சுற்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பழனிமுத்து, சென்றாம்பாளையம் பிரிவு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி உடலை எரித்து தடயங்களை அழிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பழனிமுத்து மற்றும் அவரது தந்தை குருநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே.ரெட்டி பாராட்டியுள்ளார்.