கோவையை சேர்ந்த செந்தில் பிரபு, சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவரது மகள் அனு கீர்த்தனா (19), மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
முதல்முறையாக நீட் தேர்வு எழுதிய அவர், பி.டி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு பெற்றிருந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சேரும் நோக்கில் மீண்டும் நீட் தேர்வு எழுதினார். இதற்கிடையில், நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மறுதேர்வுக்காக தொடர்ந்து தயாராகி வந்த அனு கீர்த்தனா, இன்று அதிகாலை தனது சித்தப்பாவுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில், எதிர்பார்த்த அளவுக்கு தேர்வுக்கு தயாராக முடியவில்லை என்றும், இதனால் கடும் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் வீட்டில் விபரீத முடிவுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தகவலைக் கண்ட அவரது சித்தப்பா உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, மாணவியை மீட்டு கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அனு கீர்த்தனா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், கல்வி வட்டாரத்தினரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply