கோவை மாநகராட்சியை கலைக்க வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Spread the love
கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தின்போது, மாநகராட்சியை கலைக்க வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் புதன்கிழமை மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர், மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, மாநகராட்சியை கலைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், மாநகரில் குப்பை அகற்றும் பணிக்காக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.