போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் லட்சியம் என்றும், டாஸ்மாக் துறையில் நடந்த ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களது லட்சியம் என்று தெரிவித்தார். இந்த இலக்கை அடையச் சுதந்திரமாகச் செயல்படுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகக் கூறினார். சில மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதைக் சுட்டிக்காட்டிய அமைச்சர், போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம் என்றும், தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப்பொருள் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்று பேசுபவர்கள் நாங்கள் கிடையாது எனக் கூறிய அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் துறையில் தற்போது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார். தனிநபர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் சென்று கொண்டிருந்த ரூ.1,000 கோடி ஊழல் பணம் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான முறையான அரசாணை ஜூன் 5-ஆம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
டாஸ்மாக் மட்டுமல்லாது எந்தத் துறையிலும் இனி ஊழல் இருக்காது என உறுதிப்பட தெரிவித்த அவர், மாதம் ரூ.100 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்கு தனிநபர்களின் கணக்கிற்குச் சென்ற மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மதுபான விற்பனையில் மட்டுமின்றி, கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இத்துறையில் கடந்த காலத்தில் நடந்த தவறுகள் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதிகாரிகளிடம் பணம் வசூல் செய்யும் முறை நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊழல் செய்த நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஊழியர்களை முறையாக வேலை செய்ய விடாத சூழல் இருந்ததைக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டுகளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், டாஸ்மாக் நிறுவனத்தைத் தனியார்மயம் ஆக்கும் நோக்கம் எதுவும் இந்த அரசுக்கு இல்லை என தெளிவுபடுத்தினார்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் ஜூன் மாதம் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலைத் தாண்டி மதுபானங்கள் விற்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும் என்றும், ஊழியர்கள் மதுபானங்களுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், மீறி வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் எனவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்தார்.



Leave a Reply