கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரி வளாகத்தை இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி.கே.என்.எம் செவிலியர் பயிற்சி நிறுவனம், தனது 40 ஆண்டுகால மருத்துவக் கல்வி சேவையை முன்னிட்டு தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய செவிலியர் கல்லூரியாக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் 100 மாணவர்களுக்கு செவிலியர் கல்வி வழங்கும் வகையில் இக்கல்லூரி வடிவமைக்கப் பட்டுள்ளது.
விழாவில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளைத் தலைவர் ஆர். கோபிநாத், துணைத் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஜி.கே.என்.எம் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய வளாகத்தில் நவீன வகுப்பறைகள், மேம்பட்ட செவிலியர் திறன் ஆய்வகங்கள், உருவகப்படுத்துதல் (Simulation) பயிற்சி மையங்கள் உள்ளிட்ட உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகத்தினர், அறிவு, திறன் மற்றும் இரக்க உணர்வுடன் செயல்படும் செவிலியர்களை உருவாக்குவதே கல்லூரியின் நோக்கம் என்றும், நோயாளி மையப்படுத்தப்பட்ட மருத்துவப் பயிற்சியின் மூலம் எதிர்கால சுகாதாரத் துறைக்கு திறமையான செவிலியர்களை உருவாக்க இக்கல்லூரி முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தனர்.
ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரியைத் திறந்து வைத்தார் – குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்



Leave a Reply