கல்வி, மருத்துவம், தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் – அமைச்சர் சம்பத்குமார்

Spread the love
கோவை கணபதி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், “நான் கடந்த 47 ஆண்டுகளாக கோவையில் வாழ்ந்து வருகிறேன். கோவை மக்களின் தேவைகளையும், மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களையும் நன்கு அறிந்துள்ளேன். கோவைக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

மேலும், கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு நாளும் கோவையை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை மேற்கொள்வோம். அதன் பலன்களை மக்கள் தினந்தோறும் காண்பார்கள். முதலமைச்சர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை 100 சதவீதம் நிறைவேற்றுவேன்” என்று அமைச்சர் கூறினார்.

ஊழல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த கால ஆட்சியில்தான் ஊழல் நடைபெற்றதாக திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஊழல் குறித்த புகார்களுக்கு உரிய விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, பள்ளிக் கட்டணங்கள் கண்காணிக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் பெரியார் அறிவுலகத்தை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சம்பத்குமார் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “முதல்வர் நாற்காலி எப்போது வேண்டுமானாலும் ஆட்டம் காணலாம்” என்று தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “மக்களின் முழுமையான நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற அரசை யாராலும் அசைக்க முடியாது. முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். மக்களின் செல்வாக்கையும் நம்பிக்கையையும் இந்த அரசு முழுமையாக பெற்றுள்ளது” என்றார்.

கோவை அரசு மருத்துவமனையில் இருதயவியல் துறையில் மருத்துவர் இல்லாத நிலை குறித்து கேட்கப்பட்டபோது, “அது தொடர்பாக உடனடியாக விசாரிக்கப்படும். மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை வழங்குவது அரசின் கடமை. குறைகள் ஏதேனும் இருந்தால் அவை விரைவில் சரிசெய்யப்படும்” என்று அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.