நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

Spread the love

நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற 14-வது நார்வே சர்வதேச செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இதையடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில் முதல்வர் விஜய், “நார்வே செஸ் 2026 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரே தொடரில் உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தியதுடன், தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள பிரக்ஞானந்தா மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.