திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் தனது சமூக வலைதளப் பதிவில், முதலமைச்சரின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு, குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அரசின் பொறுப்பை ஏற்காமல், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் முந்தைய ஆட்சியை காரணம் காட்டுவதாக பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “மாநிலத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து முதலமைச்சரின் பேச்சில் கவலையோ, பொறுப்புணர்வோ வெளிப்படவில்லை” என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசியல் பேரம் மற்றும் கட்சி தாவல் முயற்சிகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிய விவகாரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
பதிவின் இறுதியில், “எங்களை ‘மற்றும் பலர்’ என்று வாயளவில் கூறும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே 24 மணி நேரமும் அதிமுகவைப் பற்றியே சிந்திப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆட்சிச் செயல்பாடுகள் தொடர்பாகவும் முதலமைச்சர் விஜயை அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு தமிழக வெற்றிக் கழகம் அல்லது முதலமைச்சர் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.



Leave a Reply