உங்களுக்கு ஓட்டு போட்டா நல்லவங்க; எங்களுக்கு ஓட்டு போட்டா தற்குறியா? முதல்வர் விஜய் கேள்வி

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்ற திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை, போதைப்பொருள் பரவல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்ற அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், மாடல் அரசு என கூறப்படும் ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் கலாச்சாரம் பரவி உள்ளது. ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்தியிருந்தால் பல பெண்களை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது” என்று தெரிவித்தார்.

மேலும், “அனைத்து தவறுகளுக்கும் என் மீது பழி சுமத்த முயற்சிக்கின்றனர். மக்கள் மனதை உண்மையாக புரிந்திருந்தால் அவர்களை இழிவாக பேசியிருக்க மாட்டார்கள். அரசியல் புரிதல் இல்லாமல் கவர்ச்சியில் மயங்கி மக்கள் வாக்களித்ததாக கூறுகின்றனர். அவர்களுக்கு ஓட்டு போட்டபோது மக்கள் நல்லவர்கள்; நமக்கு ஓட்டு போட்டால் அவர்கள் தற்குறிகள் என்ற மனநிலை ஏற்க முடியாதது” என்றார்.

தொடர்ந்து, “இதே மக்கள் தானே பல ஆண்டுகளாக அவர்களுக்கு வாக்களித்து வந்தனர். மக்களை தற்குறி என கூறியவர்கள், தங்களது அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டனர்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், திருச்சி மாவட்டத் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.