தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காங்கிரஸ் வட்டாரத்தில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஜோதிமணியின் கருத்துக்கு சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளருமான ஸ்ரீநிதி எதிர்வினையாற்றிய நிலையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி, ஸ்ரீநிதி மக்கள் நீதி மய்யம் மற்றும் பாஜக பின்னணியிலிருந்து காங்கிரஸில் இணைந்தவர் என்றும், உண்மைத் தகவல்களை மறைத்து கட்சியில் வாய்ப்பு பெற்றதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கோவையில் அவசர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஸ்ரீநிதி, தன்னைப் பற்றிய பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.
“பணம் கொடுத்து சீட் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. நான் முதல் தலைமுறை அரசியல்வாதி. இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைமை எனக்கு வாய்ப்பு வழங்கியது,” என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு ஆலோசனைக் குழுக்களின் பரிசீலனைக்குப் பிறகே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகக் கூறிய அவர், “பணம் கொடுத்து சீட் வாங்கியதாகக் கூறுவது என் மீது மட்டுமல்ல, கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்” என்று சாடினார்.
பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அண்ணாமலை என் கல்லூரி சீனியர். ஒரு பொதுநிகழ்வில் மட்டுமே அவரை சந்தித்துள்ளேன். அதனை அரசியல் ரீதியாக தவறாக சித்தரிப்பது ஏற்க முடியாதது” என்றார்.
தேர்தல் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் கணிசமான வாக்குகளைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், தாம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகவில்லை என்றும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கட்சிக்குள் உள்ள சிலர் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பொறாமை காரணமாகவும் வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
“ஜோதிமணியின் பதிவுக்கு நான் பதிலளித்தது யாரையும் குறிவைத்து அல்ல. தேர்தலில் முழுமையாக பண வியாபாரம் நடந்ததாக கூறப்படுவது, என்னைப் போன்ற இளம் வேட்பாளர்களின் உழைப்பை கேள்விக்குறியாக்குகிறது,” என்றார்.
கடந்த ஒரு வாரமாக தன்னையும் தனது குடும்பத்தினரையும் குறிவைத்து அவதூறுகள் பரப்பப்படுவதால் மனவேதனை அடைந்துள்ளதாகவும், அரசியலை விட்டு விலகும் எண்ணம் கூட ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் கட்சிக்குள் இருந்து தமக்கு எதிராக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் நலன் சார்ந்த அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்ரீநிதி, தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவோர் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.
ஸ்ரீநிதியின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை மாவட்ட காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply