குடும்பத்துடன் வாக்களித்தார் எஸ்.பி. வேலுமணி 210 தொகுதிகளில் வெற்றி என நம்பிக்கை

Spread the love

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட சுகுணாபுரம் மேற்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில், அதிமுக தலைமைக் கழக செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. வேலுமணி தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
அவருடன் அவரது மனைவி வித்யாதேவி வேலுமணி, மகன் விஜய் விகாஷ், மருமகள் தீக்ஷனா மற்றும் மகள் வந்தனா என்கிற சாரங்கி ஆகியோரும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “அதிமுக–பாஜக கூட்டணி மாநிலம் முழுவதும் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “தொண்டாமுத்தூர் தொகுதியில் நான் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும், அவிநாசி தொகுதியும் உட்பட 11 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். நீலகிரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறும்,” என்றார்.
“தமிழ்நாடு முழுவதும் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையும் என்பது உறுதி. மாநிலத்தில் நல்லாட்சி மீண்டும் மலரும்,” என்றும் அவர் கூறினார்.
கோவை தெற்கு தொகுதியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிரச்சினைகள் குறித்து அவர், “பல இடங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
காவல்துறையும் அதிகாரிகளும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதை கடுமையாக கண்டிக்கிறோம். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
தேர்தல் ஆணையமும் காவல்துறையும் மேலும் வேகமாக செயல்பட்டு தவறுகளைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“கோவை மாவட்டம் மிகவும் அமைதியான மாவட்டம். இங்கு வேறு விதமான சூழ்நிலையை உருவாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்; நாங்களும் விட மாட்டோம்,” என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.