பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், அண்ணாமலையை “வருங்கால மத்திய அமைச்சர்” என குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள், கஞ்சா மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “டபுள் இன்ஜின் அரசு உருவாக வேண்டும் என்பதற்காக ஆந்திர முதல்வரும் தமிழகத்திற்கு வந்து திமுக ஆட்சி அகல வேண்டும் என்று கோஷமிட்டுச் சென்றார்,” என்றார்.
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் மாநிலங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைப்பதை சுட்டிக்காட்டிய அவர், “நாமும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் அனைத்து திட்டங்களையும் கேட்டு பெற முடியும்,” என்றார். குடும்ப ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்றும், சாதாரண மனிதருக்கும் உயர்ந்த பதவிகள் கிடைக்க வழி அமைப்பது பாஜகவால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் சந்தித்த பிரச்சனைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “இந்த காலகட்டத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. திமுக தேர்தலுக்கு முன் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீண்டும் வாக்கு கேட்க வந்துள்ளது,” என்று விமர்சித்தார்.
தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப ஆட்சிதான் என்றும், அதற்கு அடுத்ததாக நிர்வாக குறைபாடுகள் மற்றும் காவல்துறை செயல்பாடுகள் உள்ளன என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
கோவையின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், “மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கோவைக்காக இதுவரை ஐந்து ஏக்கர் நிலம் கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் கோவையின் வளர்ச்சி தடைபட்டுள்ளது,” என்றார்.
இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெறும் மாவட்டமாக கோவையை குறிப்பிட்ட அண்ணாமலை, தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அடுத்த ஐந்தாண்டு மிக முக்கியமான காலமாக இருக்கும் என்றார். “மாற்றத்தை காண விரும்பினால் செயல் திறனும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட நிர்வாகம் தேவை. அதிமுகவில் அதற்கான ஆட்கள் உள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “திட்டங்களை வழங்குவதற்கு நரேந்திர மோடி உள்ளார்; அதை செயல்படுத்துவதற்கு எடப்பாடி கே. பழனிசாமி உள்ளார்,” என்று கூறிய அவர், சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராமுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இறுதியாக, “20-20 கிரிக்கெட் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்கள் எப்படி வெற்றியை தீர்மானிக்கிறதோ, அதுபோல தேர்தலுக்கு மீதமுள்ள இரண்டு நாட்களும் மிக முக்கியம். அனைவரும் இணைந்து பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உடனிருந்தார்.



Leave a Reply