ஷூ ரேக்கிற்குள் பதுங்கிய 7 அடி பாம்பு – குடும்பத்தினர் பீதி

Spread the love

கோவை அருகே போடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஷூ ரேக்கிற்குள் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த காலணி அடுக்கில் பாம்பு பதுங்கி இருந்தது. நேற்று காலை அதை கவனித்த பிரபு, உள்ளே கருமையாக ஏதோ அசைவதை கண்டு சந்தேகமடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, சுமார் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு சுருண்டு கிடப்பது தெரியவந்தது.

இதைக் கண்டதும் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி நிபுணர் சுரேந்தருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அவர், சுமார் 20 நிமிடங்கள் போராடி, ஆக்ரோஷமாக சீறிய பாம்பை பாதுகாப்பாகப் பிடித்தார்.

பின்னர் அந்த பாம்பு சாக்குப்பையில் அடைக்கப்பட்டு, அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.

கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான இடங்களைத் தேடி பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.