விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

Spread the love
ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை, திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் – கலைவாணி தம்பதியரின் ஒரு வயது மகன் தன்வந்த். இன்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தரையோடு அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் மீது மூடப்பட்டிருந்த தகரத்தை நகர்த்தியபோது எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் சத்தம் நீண்ட நேரம் கேட்காததால் பெற்றோர் தேடியுள்ளனர். பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த ரத்தினபுரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியால் பிஞ்சுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.