முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்பு

Spread the love

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருடன் 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். அர்லேகர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய விழா வந்தே மாதரம் இசையுடன் ஆரம்பமானது. பின்னர் தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வர் விஜய் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், கூட்டணி நிர்வாகிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.