கோவை மாவட்டத்தில் மலைவாழ் கிராமங்களில் வாழும் ஏழை, எளிய குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர் அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சி.கே. கண்ணன், ஆண்டுதோறும் மலைவாழ் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், சின்னாம்பதி பகுதியில் உள்ள அரசு பழங்குடியின தொடக்கப் பள்ளியை தத்தெடுத்து, அங்கு கல்வி பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பைகள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், கோவை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் இலவசமாக வீட்டுமனை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டும் அந்த உதவி வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.கே. கண்ணன் தெரிவித்ததாவது, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட பின்னரும் மீண்டு கல்வி பயிலும் நிலையில் உள்ளதால், அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் பெயரில் வீட்டுமனைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், சின்னாம்பதி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஐந்து சென்ட் நிலம் தானமாக வழங்கப் பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் கடந்த மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிய சி.கே. கண்ணன்



Leave a Reply