டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த தொழிற்சங்கங்கள்

Spread the love

டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவை சுந்தராபுரத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், 480 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தும், கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து காலதாமதம் செய்யாமல், அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல், மாவட்ட மேலாளர்களுக்கான அதிகாரங்களை மீண்டும் வழங்குதல், கிடங்குகளில் பணியாற்றும் மற்றும் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மீண்டும் கடை பணியுடன் பிழைப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் முறையான ஆய்வு இல்லாமல் மூடப்பட்டதாக கூறப்படும் 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மறுஆய்வு செய்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மனமகிழ் மன்றங்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், End-to-End Billing முறையில் நிலவும் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து அனைத்து கடைகளிலும் தடையற்ற இணைய வசதி மற்றும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளின் மின்கட்டணம், கட்டிட வாடகை, குடிநீர், இறக்குக் கூலி உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளை ஊழியர்கள் மீது சுமத்தாமல் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும், டாஸ்மாக் மற்றும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் ஜான் அந்தோணி ராஜ், பொதுச் செயலாளர் செந்தில் பிரபு, பொருளாளர் ராமகிருஷ்ணன், ஏஐடியுசி நிர்வாகிகள் கணேசன், மனோகரன், தொமுச மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், கே. ராமமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பால்ராஜ், தங்கவேல், பாட்டாளி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோரிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்த அமைச்சர் விக்னேஷ், அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.