கோவை ரத்தினபுரி அருகே பூட்டி இருந்த வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் தீக்கிரையாயின.
கோவை ரத்தினபுரி நாராயணசாமி வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் அதே பகுதியில் அவர் வசித்து வரும் நிலையில் இன்று வழக்கம் போல் மூன்று பேரும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பிற்பகலில் வீட்டின் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் ஏற்பட்ட தீ பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்துள்ளது.
இதனால் வீட்டில் இருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீ அடுத்தடுத்த வீடுகளில் பரவாமல் தடுத்தனர்.இருப்பினும் மள மளவென பரவிய தீயானது ஜெயபிரகாஷின் வீட்டில் இருந்த பாத்திரங்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் துணிமணிகள் உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கியுள்ளது.
தொடர்ந்து அங்கு சென்ற ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்தால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் துணிமணிகளும் எரிந்து சாம்பலானதால் மாற்றுத் துணி கூட இல்லாமல் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…..



Leave a Reply