கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கனகசபாபதி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை குப்பேபாளையம்–காளிபாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோமாளி அரங்கன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிலச்சல் ரௌத் (35), ஆனந்த் (22) மற்றும் திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்த உதயாஜெஸ்டின் (21) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த 2.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



Leave a Reply