கோவையில் புதுப்பிக்கப்பட்ட இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை கட்டிடம் திறப்பு

Spread the love
எல்.ராஜகோபால்

கோவை இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை (ICCI) சார்பில், புதுப்பிக்கப்பட்ட சேம்பர் கட்டிட திறப்பு விழா மற்றும் ஜி.கே. சுந்தரம் விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை அவிநாசி சாலையிலுள்ள சேம்பர் டவர்ஸில் நடைபெற்றது.

புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் என். கண்ணன், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் ராஜேஷ் லுந்த், கௌரவ செயலாளர் பிரதீப், முன்னாள் தலைவர்கள் வனிதா மோகன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஜி.கே. சுந்தரம் விருதுகள் வழங்கும் விழாவில், தொழில் துறை பிரிவில் மகாவீர்ஸ் நிறுவனத்தின் பால்சந்த் மற்றும் ரங்கம்மாள் ஸ்டீல்ஸ் அண்ட் மாலியபிள்ஸ் நிறுவனத்தின் கே. இளங்கோ ஆகியோருக்கும், சேவைப் பிரிவில் என்.வி. நாகசுப்பிரமணியத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பேசிய எஸ். கிருஷ்ணன், “எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்க உள்ளது. அனைவரும் ஏஐ முகவர்களை நம்பி செயல்படும் சூழல் உருவாகும். எனவே, தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது துறை சார்ந்த அடிப்படை அறிவிலும் திறமையிலும் வலுவாக இருக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் கௌரவ செயலாளர் பிரதீப் நன்றியுரை வழங்கினார்.