​கோவையில் தொடரும் வன்முறை சம்பவங்கள்  – உடனடியாக கடும் நடவடிக்கை தேவை – ​எஸ்.பி. வேலுமணி கண்டனம்

Spread the love

கோவையில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளதாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி  தெரிவித்துள்ளார்.

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கல்லூரியில் படித்து வந்தபோது கார்த்திக் என்ற நபருடன் பழகியதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர், அந்த நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதை அறிந்த இளம்பெண், அவருடன் பேசுவதை நிறுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி கார்த்திக் தனது நண்பர்களுடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து, குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மண்ணெண்ணெய் பாட்டில்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த வன்முறை அராஜகம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், சமீபத்தில் சூலூர் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் துயரம் இன்னும் மறையாத நிலையில், மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் நடந்துள்ளது மிகவும் வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து, இத்தகைய வன்முறை கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.