ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சங்கத் தலைவர் பழனிச்சாமி, “முதல்வர் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். புதிய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. தேர்தலில் அறிவிக்கப்பட்டபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்றார்.
மேலும், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளிடம் கடன் வசூல் செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.



Leave a Reply