கிரெடாய் கோவை அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள்கள் நடைபெறும் ‘ஃபேர்ப்ரோ-2026’ மெகா வீட்டுமனை கண்காட்சி, கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முன்னணி கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நவீன அரங்குகளை அமைத்து, தங்களது வீட்டுவசதி மற்றும் நிலத் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளன. அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டுமனைகள், வாஸ்து அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பிரீமியம் குடியிருப்புகள், பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வளாகங்கள், முதியோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி நடைபெறும் நாள்களில் வீடு வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், திட்டங்களை நேரில் பார்வையிட விரும்புவோருக்காக கண்காட்சி அரங்கிலிருந்து திட்டப் பகுதிகளுக்கு களப்பயண வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியின் தொடக்க விழாவில் கிரெடாய் கோவை தலைவர் எஸ்.ஆர். அரவிந்த் குமார் பேசியதாவது: கோவையில் வீடு வாங்குவோர் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வாக ஃபேர்ப்ரோ வளர்ச்சி பெற்றுள்ளது. கிரெடாய் உறுப்பினர்கள் கட்டடங்களை மட்டும் நிர்மாணிப்பதில்லை; நகரின் வளர்ச்சிக்கும், அதன் வானளாவிய தோற்றத்தை உருவாக்குவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கோவை மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பின்னணியில் கிரெடாய் முக்கியப் பங்காற்றி வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து, கிரெடாய் தமிழ்நாடு தலைவர்-தேர்வான குகன் இளங்கோ பேசுகையில், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவை கிரெடாயின் அடையாளங்களாக உள்ளன என்றார். கோவை மண்டலத்தில் முன்பு ஓராண்டுக்கு சுமார் 50 ரேரா (சுநுசுயு) ஒப்புதல்கள் கிடைத்த நிலையில், தற்போது ஆறு மாதங்களிலேயே 50 ஒப்புதல்கள் கிடைப்பது கட்டுமானத் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பாரத ஸ்டேட் வங்கியின் நெட்வொர்க்-3 பொது மேலாளர் ஹரிதா பூர்ணிமா கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில், ஒரே இடத்தில் வீடு வாங்குவோருக்கு பல்வேறு தேர்வுகளை வழங்கும் சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளது என்றார். கிரெடாய் நடத்தும் சொத்து கண்காட்சிகளுடன் பாரத ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அளவில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.9.85 லட்சம் கோடி மதிப்பிலான வீட்டுக் கடன்களை வழங்கியுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடி எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கடன் தொகையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும், இந்த வாய்ப்பை வீடு வாங்குவோர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, ஃபேர்ப்ரோ-2026 தலைவர் பி. கார்த்திக் குமார் வரவேற்புரை யாற்றினார். தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என்று போற்றப்படும் கோவை, தகவல் தொழில்நுட்பச் சேவைகள், மருத்துவச் சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி மையமாக வேகமாக வளர்ந்து வருவதால், இப்பகுதியில் சொத்துகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கிரெடாய் துணைத் தலைவர் ராஜீவ் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.



Leave a Reply