இதுகுறித்து சைமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.26,678 கோடியில் இருந்து இந்த ஆண்டு ரூ.29,863 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. குடிநீர், கழிவுநீர் மற்றும் நகர்ப்புற நீர் உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்வது பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், பம்புகள், மோட்டார்கள், வால்வுகள் உள்ளிட்ட பொறியியல் உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மேற்கூரை சூரிய மின்சக்திக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதும் வரவேற்கத்தக்கது. மேற்கூரை சோலார் மானியம் ரூ.78 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, சூரிய மின்சக்தி பயன்பாட்டை மேலும் அதிகரிக்க உதவும்.
தொழிற்சாலைகள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் மிகவும் அவசியமானது. மின் துறையை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொழில்துறையின் உற்பத்தித் திறன் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்தும்.
தொடர்ச்சியான தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் தமிழக அரசின் நீண்டகால தொலைநோக்கு திட்டத்தையும் சைமா வரவேற்றுள்ளது. இதன் மூலம் முதலீடுகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகள் உருவாகி, இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழகத்தின் நிலை மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர பொறியியல் நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான தொடர் கவனம் பயனளிக்கும் என்றும் சைமா தெரிவித்துள்ளது.
பம்ப் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏமாற்றம்
அதேநேரத்தில், பம்ப் உற்பத்தித் துறையை முக்கியத்துவம் வாய்ந்த (Thrust) துறையாக அறிவிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக சைமா தெரிவித்துள்ளது.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பின் நிலை கட்டணத்தை நீக்குவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த கோரிக்கைகள் சைமாவின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ள நிலையில், அவற்றை தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வேளாண் பட்ஜெட் மற்றும் துறைவாரியான விரிவான அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக பாசனம், நீர்வள மேம்பாடு, சூரிய சக்தியில் இயங்கும் பம்ப் அமைப்புகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் ஆதரவு தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறும் என நம்புவதாகவும் சைமா தெரிவித்துள்ளது.



Leave a Reply