இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க் – ஜெம் மருத்துவமனையின் ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ அறிமுகம்

Spread the love

சென்னை மற்றும் கோவை மையங்களை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க் திட்டமான ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ யை ஜெம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரைப்பை–குடலியல், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் முன்னணி மருத்துவமனையாக விளங்கும் ஜெம் மருத்துவமனையின் இந்த புதிய திட்டம், சென்னை மற்றும் கோவை மையங்களில் உள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்கட்டமைப்புகளை நிகழ்நேரத்தில் இணைக்கிறது. இதன் மூலம், இரு நகரங்களில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரே நேரத்தில் இணைந்து சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும், மருத்துவத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், தொலைதூரத்திலிருந்தே வழிகாட்டவும் முடியும்.
இந்த நெட்வொர்க்கில் இரு-முனைய இணைப்பு, செயற்கை நுண்ணறிவுசார்ந்த அறுவை சிகிச்சை ஆதரவு, அவசரகால நிபுணர் ஆலோசனை, தொலைதூர அறுவை சிகிச்சை பயிற்சி மற்றும் பல நகரங்களில் உள்ள நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பிராந்தியங்களில் உள்ள நோயாளிகள், பெருநகரங்களுக்கு பயணம் செய்யாமல் உயர்தர மருத்துவ சேவையைப் பெற முடியும்.
ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி. பழனிவேலு கூறுகையில், “ரோபோட்டிக்ஸ், அதிவேக இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, புவியியல் எல்லைகளைத் தாண்டி மருத்துவ நிபுணத்துவத்தை நோயாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். எதிர்கால சுகாதார சேவைக்கான புதிய தரத்தை இது உருவாக்கும்,” என்றார்.
தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பி. பிரவீன் ராஜ் கூறுகையில், “நவீன மருத்துவத்தில் புவியியல் எல்லைகள் இனி தடையல்ல என்பதை இந்த முயற்சி நிரூபிக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு, துல்லியமான சிகிச்சை மற்றும் வருங்கால அறுவை சிகிச்சை நிபுணர்களின் பயிற்சிக்கு இந்த நெட்வொர்க் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்,” என்றார்.
இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, கணையப் புற்றுநோய்க்கான சிக்கலான ரோபோடிக் விப்பில் (Robotic Whipple Procedure) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர் சி. பழனிவேலு புற்றுநோய் பாதித்த பகுதியை அகற்றும் பணியையும், டாக்டர் செந்தில்நாதன் உடற்கூறு மறுசீரமைப்புப் பணியையும் இணைந்து செய்தனர்.
மேலும், பிறவி பித்தநாளக் குறைபாட்டுக்கான Choledochal Cyst Excision ரோபோடிக் அறுவை சிகிச்சையும் சென்னை மற்றும் கோவை மருத்துவக் குழுக்களால் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
புதிய ரோபோடிக் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதால், அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டமிடல், புற்றுநோய் திசுக்களைத் துல்லியமாகக் கண்டறிதல், நேரடி வழிகாட்டுதல், ஆபத்து மதிப்பீடு மற்றும் சிக்கல்களை முன்கூட்டியே கணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் மேம்படுத்தப்ப ட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.