ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் தேவையில்லை; தானாகவே கவிழும் -– எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

Spread the love

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் தெளிவான நிர்வாகம் இல்லை என்றும், தொழில் முதலீடுகளை ஈர்க்கத் தவறியதால் தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாகவும் குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரு வதாகவும் தெரிவித்தார்.
“அதிமுக தனியாக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்ய வேண்டி யதில்லை. அரசின் நிர்வாகத் தோல்விகளால் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும்” என்று அவர் கூறினார்.
காவிரி விவகாரத்தில் டெல்டா விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர முதலமைச்சர் உரிய அக்கறை காட்டவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில், முன்பு யூனிட் ரூ.20-க்கு மின்சாரம் வாங்கியதை ஊழல் எனக் குற்றம்சாட்டியவர்கள், தற்போது யூனிட் ரூ.37-க்கு கொள்முதல் செய்யப் படுவதாகக் கூறப்படும் நிலையில், அதில் ஊழல் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்குப் பிறகே முழுமையான கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும், தமிழக அரசு நீதிமன்றத்தில் தனது வாதங்களை முறையாக முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசுகையில், அக்கட்சி இன்னும் முறையான அமைப்பாகக் கூட உருவாகவில்லை என்றும், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
அப்போது மாவட்ட செயலாளர்கள் செ.ம.வேலுசாமி, அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடனிருந்தனர்.