தீபாவளித் திருநாளை முன்னிட்டு கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகாசமஸ்தானத்தின் 2-ஆம் குருமகாசந்நிதானம் சாந்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பொதுமக்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நன்னாளாகும் என்றும், அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் என்னும் ஒளியை நம் உள்ளங்களில் ஏற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தீய எண்ணங்களை நீக்கி அன்பு, கருணை, பொறுமை, ஒற்றுமை போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏழை எளியோருக்கு உதவி செய்து ஈகை பண்பை வளர்ப்பதோடு, குழந்தைகளின் வாழ்வில் கல்வி ஒளியும் இளைஞர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியும் பிரகாசிக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். உலகெங்கும் அமைதியும் சகோதரத்துவமும் நிலவவும், நமது பாரம்பரியமும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இறைவழிபாட்டுடன் இத்திருநாளைக் கொண்டாடி அனைவரும் உடல் நலமும், மன வளமும், கல்வி மற்றும் செல்வ வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.



Leave a Reply