கோவையின் 2027-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் பவன்குமார்!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் (Integrated Draft Electoral Roll) வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பட்டியலைக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டார்.

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 27,44,472 வாக்காளர்கள் இருந்த நிலையில், தொடர் திருத்தப் பணிகளுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27,68,820 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 13,33,590 பேரும், பெண்கள் 14,34,688 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 542 பேரும் அடங்குவர். முந்தைய இறுதிப் பட்டியலை விட தற்போது 24,348 வாக்காளர்கள் (0.89%) அதிகரித்துள்ளனர்.

2026 தொடர் திருத்தப் பணிகளின் போது படிவம் 6-ன் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் புதிதாக 37,343 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் போன்ற காரணங்களால் 12,995 பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 43,119 ஆக உள்ளது. அதேபோல், மாவட்டத்தில் இருந்த 3,563 வாக்குப்பதிவு மையங்கள் திருத்தப்பட்டு, தற்போது 3,554 வாக்குப்பதிவு மையங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.