உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (ஜி.கே.என்.எம்.) சார்பில், சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இரண்டு நாள் கண்காட்சி தொடங்கியது.
தொடர்ந்து 6-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியை, மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவ இயக்குநர் டாக்டர் சுந்தரராஜன், வெளிநோயாளிகள் மருத்துவ மைய இயக்குநர் டாக்டர் ராகவேந்திரா எம்.எஸ்., மருத்துவ விவகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் இயக்குநர் டாக்டர் வி. சந்தோஷ் ஆதியோருடன், நாளமில்லா சுரப்பியல் மற்றும் சர்க்கரை நோய்த் துறை ஆலோசகர்கள் டாக்டர் பி.எல். சீனிவாசன், டாக்டர் நிகில் சஞ்சீவ், சர்க்கரை நோய் மற்றும் பாதப் பராமரிப்பு சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஆர். முத்துலட்சுமி, மாற்று மருத்துவத் துறை மருத்துவர்கள் டாக்டர் ஆர். பிரியதர்ஷினி, டாக்டர் எஸ். காந்தி, பிசியோதெரபி மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ஆர். மகேஷ் மித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், ரத்த சர்க்கரை அளவு, உடல் நிறை குறியீடு (BMI), கண் பரிசோதனை, நீரிழிவு பாதப் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுப் பழக்கவழக் கங்கள், உடற்பயிற்சி, யோகா, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் மற்றும் இன்சுலின் பயன்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.
சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்தும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயின் பாதிப்புகளைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு கண்காட்சி



Leave a Reply