கோவையில் 1,108 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு – அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்பு

Spread the love

கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு 1,108 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார்.

தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு கலவை சாதம் வழங்கிய அமைச்சர், ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மரக்கன்றுகளையும் வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் சம்பத்குமார், கர்ப்பிணி பெண்களை தனது சகோதரிகளாக கருதி, அவர்களுக்கு சீமந்தம் நடத்தி சீர்வரிசை வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறந்த குடிமக்களாக வளர வேண்டும் என முதலமைச்சர் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், பெண்கள் சுயதொழில் தொடங்குதல், பள்ளி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் முன்னேற அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 1,163 விடுதிகள் செயல்பட்டு வருவதாகவும், விடுதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சென்ட்ரலைஸ்டு கிச்சனில் இருந்து உணவு தாமதமாக வருவதாக கூறப்படும் புகார்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சென்ட்ரலைஸ்டு கிச்சனிலும் ஆய்வு நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு தரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஆணையாளர் கண்ணன் தொடர்பான கேள்விக்கு, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், உண்மைத் தன்மை முழுமையாக தெரிய வரும் வரை உரிய நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *